2000 ரூபாய் நோட்டுக்காக கோயில்களில் உண்டியல்களை திறக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2023 03:09
வடமதுரை: 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செலுத்துவதற்கான காலக்கெடுவான செப்.30 நெருங்கி வருவதால் கோயில்களில் உண்டியல் திறந்து எண்ணும் பணி மும்முரமாக நடக்கிறது.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான இந்து கோயில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. சில கிராமங்களில், சமூகத்தினர் குல தெய்வங்களாக வழிபடும் சிறிய கோயில்கள் மட்டும் அவரவர்களே பராமரித்து வருகின்றனர். இவர்கள் திருவிழா காலங்களில் மட்டும் உண்டியல்களை திறந்து அதிலிருக்கும் பணத்தை எடுத்து கோயில் செலவினங்களுக்கு பயன்படுத்துவர். அதுவரை அவசியமின்றி திறக்க மாட்டார்கள். கடந்த 2016ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறுவதாக அறிவித்து, செப்.30க்குள் வங்கிகளில் செலுத்தி டெபாசிட் செய்யலாம் அல்லது தந்து மாற்றி கொள்ளலாம் என அவகாசம் தந்துள்ளது. இத்தேதி நெருங்கி வருவதையடுத்து தமிழகமெங்கும் இருக்கும் சிறிய, பெரிய கோயில் உண்டியல்களில் 2000 ரூபாய் நோட்டு ஏதும் உள்ளதா என்பதை பார்ப்பதற்காகவே திறந்து எண்ணும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. அடிக்கடி கோயில் உண்டியல்கள் திறக்கப்படும் வடமதுரை இருக்கும் பெரிய கோயில்களில் கடந்த மாதம் வரையிலும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.