பதிவு செய்த நாள்
24
செப்
2023
03:09
பாலக்காடு : சனாதன தர்மம் எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று, என, பாலக்காட்டில் நடக்கும் பிராமண சங்கமம் நிகழ்வில், உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கடராமன் பேசினார். கேரள மாநிலம், பாலக்காடு ராமநாதபுரம் அருகே உள்ள கலையரங்கில், கேரள பிராமண சபையின் சார்பில் நடக்கும், உலகளாவிய பிரமாண சங்கமத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்று நடந்தது. வேத பாரம்பரியத்தின் வாயிலாக உலக நாகரிகம் என்ற தலைப்பில் அமர்வு நடந்தது. உச்ச நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கடராமன் பேசியதாவது: தர்மத்திலும் ஒரு சக்தி: சனாதன தர்மம் எப்போதும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. கடவுளுக்கு உள்ள சக்தியை போல், காற்றிலுள்ள சக்தியை போல், சனாதன தர்மத்திலும் ஒரு சக்தி உள்ளது. அது குறித்து, அறியாதவர்கள் பேசக் கூடாது.
சுயநலவாதிகளின் காலத்தில் நாம் வாழ்கிறோம். தர்மத்துக்கும், தானத்துக்கும் இடம் இல்லாத காலத்தில் வாழ்கிறோம். தியாகம் மற்றும் சகிப்புத்தன்மை இருந்தால் மட்டும் தான், நல்ல வாழ்க்கையை வாழ முடியும். ஒவ்வொருவரும் சனாதன தர்மத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். அமர்வில், கர்நாடக சமஸ்கிருத பல்கலை பேராசிரியர் ஆழ்வார், பல மொழி மற்றும் ஊடக வல்லுனர் ஷிபயில் வைத்தியா ஆகியோர் விவாதித்தனர்.
முன்னதாக, புதுமை, பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த அமர்வில், கர்நாடக வங்கி தலைவர் பிரதீப்குமார், அகஸ்தியா லீகல் எல்.எல்.பி., பங்குதாரர் வெங்கடேஷ், துபாய் பெட்ரோபேக் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுந்தர் கல்யாணம் ஆகியோர் விவாதித்தனர். வேதக்கல்வி வாயிலாக இலக்குகளை அடையுங்கள் என்ற தலைப்பில் நடந்த அமர்வில், பெங்களூரு ஐ.ஐ.எம்., பேராசிரியர் மகாதேவன், மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் ராமசுப்ரமணியன், மெட்ராஸ் சமஸ்கிருத கல்லுாரி ஓய்வுபெற்ற முதல்வர் சேஷாத்ரிநாத் சாஸ்திரிகள், வேத அறிஞர் மற்றும் மேலாண்மை குரு சர்மா ஆகியோர் விவாதித்தனர். சுய ஞானம் வாயிலாக பெண்களுக்கு அதிகாரம், நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் நடந்த அமர்வில், பாரத் கியான் நிறுவனர்களான ஹரி, ஹேமா ஹரி, பரதநாட்டியம் மற்றும் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற கலைஞர் பத்மஜாசுரேஷ் ஆகியோர் விவாதித்தனர்.
கலை நிகழ்ச்சி: தனிப்பட்ட வளர்ச்சியில் மைல்கற்களை உருவாக்குதல் என்ற தலைப்பில் நடந்த அமர்வில், பெங்களூரு இந்திய அறிவியல் கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் பரமேஸ்வர் பி.ஐயர், ஆஸ்டின், அமெரிக்கா டெக்சாஸில் செயல்படும் ஆட்டோனாமைஸ் எ.ஐ., சி.இ.ஓ., மற்றும் நிறுவனர் கணேஷ் பத்மநாபன், ஆசிரியர் மற்றும் கலை ஆலோசகர், நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் ராமா பரத்வாஜ் ஆகியோர் விவாதித்தனர். மனிதனை உருவாக்கும் திறன் என்ற தலைப்பில் நடந்த அமர்வில், பத்மஸ்ரீ விருது பெற்ற ஆனந்த சங்கர் ஜெயந்த், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் கல்யாணராமன், சங்கரா கண் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து, கோவை கலாலயம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்றைய நிகழ்ச்சிகளை லைவ் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.youtube.com/watch?v=VmRR04--Bu4