பதிவு செய்த நாள்
27
செப்
2023
01:09
மானாமதுரை: மானாமதுரை அருகே கிளங்காட்டூர் ஏ. நெடுங்குளத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 15வருடங்களுக்கு பிறகு புது மண் சட்டிகளில் மணக்க, மணக்க கறிச்சோற்றை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
மானாமதுரை அருகே கிளங்காட்டூர் ஏ.நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அழகிமீனாள் கோயிலில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வருடம் தோறும் புரட்டாசி மாதம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகளை புது மண்சட்டிகளில் கொண்டு சென்று அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இத்திருவிழா கொண்டாடப்படாமல் இருந்து வந்தது. இதனையடுத்து தற்போது 15 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் புரட்டாசி மாதம் பிறந்தவுடன் கிராம மக்கள் விழா நடத்த முடிவு செய்து காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.நேற்று இரவு கிராம மக்கள் தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட பணியாரம், கொழுக்கட்டை, கறிச்சோறு, நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுகறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை புது மண் சட்டிகளில் வைத்து தீப்பந்த விளக்கு ஏற்றி அணையாமல் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனுக்கு படையெடுத்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் கிராம மக்கள் கொண்டு சென்ற அசைவ உணவுகளை தங்களது உறவினர்களோடு சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் சிந்துஜா சடையப்பன் கூறுகையில், எங்கள் கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக இந்த திருவிழா கொண்டாடப்படாத காரணத்தினால் கடந்த சில வருடங்களாக விவசாயம் பொய்த்து போனதால் ஊர் மக்கள் ஒன்று கூடி மீண்டும் திருவிழா நடத்த முடிவு செய்து இந்த வருடம் மிக சிறப்பான முறையில் திருவிழாவை நடத்தியுள்ளோம். ஆகையால் இந்த வருடம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றார்.