திருமலையில் பாக் சவாரி; மகிழ மரமாக இருக்கும் அனந்தாழ்வாருக்கு பெருமாள் காட்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2023 01:09
திருப்பதி; திருமலையில் வெங்கடேசப் பெருமானின் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் கடைப்பிடிக்கப்படும் வருடாந்திர பாக் சவாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
வைணவத்தலைவர் ராமானுஜரின் சீடர்களில் முக்கியமானவர் அனந்தாழ்வார். ஒருசமயம் திருமலையில் ஏழுமலையானுக்கு புஷ்பத்தொண்டு செய்வதாக ராமானுஜரிடம் விருப்பம் தெரிவித்தார். அவரை, ‘‘நீயே! ஆண்பிள்ளை’’ என போற்றினார். திருமலைக்கு வந்த அவர் நந்தவனத்தை நிறுவி மலர் சேவை செய்து வந்தார். அனந்தாழ்வான் பரமபதித்தபோது, அவருக்கு இந்த நந்தவனத்திலேயே சரம ஸம்ஸ்காரம் செய்யும்படி திருவேங்கடவன் நியமிக்க, அப்படி ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மகிழ மரமாக தற்போதும் அனந்தாழ்வான் எழுந்தருளியுள்ளார்.
அனந்தாழ்வானே மகிழ மரமாக எழுந்தருளியிருப்பதாக நாம் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் திருவேங்கடமுடையானே அதை உறுதி செய்யும் வகையில் வருடம்தோறும் இரண்டு முறை இத்தோட்டத்திற்கு எழுந்தருளி மகிழ மரமாக எழுந்தருளியுள்ள அனந்தாழ்வானுக்கு மாலை சடகோபன் முதலியன சாதித்து மரியாதைகளை அருளுகிறான். பிராட்டியை விட்டு விட்டுக் கோயிலுக்கு அப்பிரதக்ஷணமாகத் திருவேங்கடமுடையான் ஓடிய நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிரம்மோத்ஸவம் முடிந்த மறுநாள் மாலை திருவேங்கடமுடையான் உபயநாச்சிமார்கள் இல்லாமல், தனியாக கோயிலுக்கு அப்பிரதக்ஷிணமாக அனந்தாழ்வான் தோட்டத்திற்கு எழுந்தருளி, அங்கு அமைந்துள்ள மண்டபத்தில் ஆஸ்தானம் கண்டருளி பிறகு. மகிழ மரத்திற்கு மாலை சடகோபன் முதலிய மரியாதைகளை அருளுகிறான். இந்நிகழ்விற்கு ஸ்ரீவாரி பாக் சவாரி உத்ஸவம் என்று பெயர் பாக் என்றால் தோட்டம் சவாரி என்றால் புறப்பாடு அனந்தாழ்வான் பரமபதித்த தினமான திருவாடிப்பூரத்தன்றும், ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள், திருவேங்கடமுடையான் உபயநாச்சிமார்களுடன் கோயிலுக்குப் பிரதக்ஷிணமாக தோட்டத்திற்கு எழுந்தருளி அங்குள்ள மகிழ மரத்திற்கு மாலை, சடகோபன் முதலியன அருளுகிறான். இந்தாண்டும் விழா சிறப்பாக நடைபெற்றது. பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். உற்சவருக்கும், அனந்தாழ்வார் தோட்டத்தில் உள்ள மகிழ மரத்துக்கும் சிறப்புப்பூஜைகள் நடந்தது. அதில் ஜீயர்சுவாமிகள், வேதப் பண்டிதர்கள் பங்கேற்று நாளாயிரம் திவ்ய பிரபந்த பாடல்கள் பாட நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.