வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான வெளி மாவட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.