உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் பூத்துக்குலுங்குவதால், பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து வழிபட்டுச்செல்கின்றனர்.
மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில், அமராவதி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கோவில் வளாகத்தில், நாகலிங்க மரமும் செழித்து வளர்ந்து, அப்பகுதியின் ஆன்மிக சிறப்பை அதிகரித்துள்ளது. அரிய சிவலிங்க அமைப்பைக்கொண்ட இந்த பூக்களின் இதழ்கள், படமெடுத்த நாகத்தைப் போல அமைந்திருக்க, அதன் மையப்பகுதியில் சிவலிங்கம் போன்ற அமைப்பும், சுற்றிலும் தேவதைகள் வழிபடுவது போல போன்ற, மகரந்தச் சேர்க்கை உறுப்புகளும் அமைந்துள்ளன. பெரும்பாலான மரங்களில் கிளைகளின் நுனியில் பூக்கள் பூக்கும். ஆனால், நாகலிங்க மரத்தில் அடி மரத்திலிருந்தே தொங்கும் நீண்ட பிரத்யேகக் கொடிகளில், கொத்துக்கொத்தாக ஒரே நாளில் நுாற்றுக்கணக்கான பூக்கள் பூக்கின்றன. ஆண்டுக்கு, 2 அல்லது 3 முறை மட்டுமே, மிக அடர்த்தியாக இம்மரத்தில் பூக்கள் இருக்கும். தற்போது காசி விஸ்வநாதர் கோவிலில் இத்கைய சீசன் துவங்கி பூக்கள் விட்டுள்ளன. இதைக்கண்டு ரசிக்கவும், வழிபடவும் பக்தர்கள் ஆர்வத்துடன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘நாகலிங்க பூக்கள் மகரந்தச் சேர்க்கை அடைந்த பின், பெரிய காய்களாக மாறி, அவை கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து, விதைகளை பரப்பும் அரிய சுழற்சியைக் கொண்டதாகும். உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் இவ்வகை மரங்கள் அரிதாகவே காணப்படுகின்றன,’ என்றனர்.