பதிவு செய்த நாள்
30
செப்
2023
04:09
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் காரணமாக, வரும், 5ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக லிப்ட், காத்திருப்பு அறை, கட்டண சீட்டு வழங்கும் இடம், புதிய யாகசாலை மண்டபம் கட்டும் பணி, பார்க்கிங் பகுதியில் புதிய கழிப்பறை கட்டடம் கட்டும் பணி, தங்க ரத பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி, அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் மலைப்பாதையில் தார் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதால், வரும் அக்டோபர் 5ம் தேதி முதல், ஒரு மாத காலத்திற்கு, மலைப்பாதையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோவில் பஸ் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.