பதிவு செய்த நாள்
15
அக்
2012
11:10
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா இன்று துவங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. முப்பெரும் தேவியரான மாரி, காளி, காட்டேரி வீற்றிருந்து அருள்பாலித்து வரும், ஊட்டி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி பெருவிழா இன்று காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை 6.30 மணிக்கு புவனேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். 16ம் தேதி துர்கை, 17ம் தேதி அன்னபூரணி, 18ம் தேதி பார்வதி, 19ம் தேதி ராஜராஜேஸ்வரி, 20ம் தேதி மகாலட்சுமி, 21ம் தேதி அபிராமி, 22ம் தேதி காமாட்சி, 23ம் தேதி சரஸ்வதி அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 24ம் தேதி காலை 6.30 மணிக்கு அபிஷேக அலங்காரம், மாலை 6.30 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மனோகரன், ஆய்வாளர் தனசேகரன், உதவி ஆணையர் பச்சையப்பன் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர். வரும் 24ம் தேதி விஜயதசமி அன்று ஊட்டி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பாறை முனீஸ்வரர் கோவில் அருகே தெற்கு பகுதியில் மகிஷாசுர வதம் நிகழ்ச்சியான அம்புசேவை நிகழ்ச்சி இரவு 9.00 மணிக்கு நடத்தப்படுகிறது. ஊட்டி நகரில் உள்ள நவ கோவில்களில் இருந்து தேர் ஊர்வலம் இங்கு வந்து நவ தேவியரின் மகிஷாசுர வதம் நிகழ்ச்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.