வடக்காச்சி அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் விழா; குலவையிட்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2023 12:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவிற்கு துவக்க விழாவாக நடக்கும் வடக்காச்சி அம்மன் கோயில் மது பொங்கல் திருவிழா நடந்தது.
காலையில் அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் நடந்தது. பெண்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இரவு மது பொங்கல் விழா நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த 10 வயது சிறுமி தலையில் மதுக்கலயத்தை சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார். பக்தர்கள் அவருக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். சிறுமி கோயிலை மூன்று முறை சுற்றி வந்து பலிபீடத்தில் முன் மதுக்கலயத்தை இறக்கி வைத்தார். சிறிது நேரத்தில் கலயத்தில் இருந்த பல்வேறு வகையான மாவுப்பொருட்கள் கலந்த மது கலவை பொங்கி வழிந்தது. பக்தர்கள் குலவையிட்டும், கை தட்டி ஆரவாரம் செய்தும் அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். அம்மனுக்கு சிறப்பு நடுநிசி பூஜைகள் நடந்தது. பின்னர் முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா பறைசாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடு இரவில் தப்பை மேளம் முழங்க ஒவ்வொரு வீதியாக சென்று தேர் திருவிழா நடக்கும் நாள், நேரம் பற்றிய விவரங்கள் அறிவிப்பு செய்யப்பட்டது.