பதிவு செய்த நாள்
05
அக்
2023
12:10
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கோ சாலையில் பசுக்களை பாதுகாக்க குளிர்ச்சி தரும் மேற்கூரை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
கள்ளழகர் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கும் பசுக்கள், குதிரை, யானை போன்றவை கோயில் கோ சாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினமும் அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனத்திற்கு பசு, குதிரை, யானை வரவழைக்கப்படுகிறது. இவற்றுக்கான கோ சாலையில் தற்போது பராமரிப்பு பணி நடக்கிறது.
துணை கமிஷனர் ராமசாமி கூறியதாவது: பசுக்களை வழங்கும் பக்தர்கள், கோவர்த்தன நீரூற்றில் உள்ள கிருஷ்ணன் கோயில் முன்பு நின்று கோ பூஜை செய்து கோ சாலையில் கொண்டு விடவேண்டும். அவற்றுக்கு வைக்கோல் உட்பட தீவனங்கள் வழங்கப்படும். பசுக்கள் மூலம் கிடைக்கிற பால் முழுவதும் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது. இவற்றின் பராமரிப்புக்காக 3 பணியாளர்கள் உள்ளனர். தற்போது 20 பசுக்கள், கன்றுகள் உள்ளன. கோ சாலையில் பசுக்களை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க பேன், குளிர்ச்சி தரும் கூரை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. ரூ. 5 லட்சம் செலவில் 3000 சதுர அடி அளவில் இப்பணி நடக்கிறது, என்றார்.