பெயர்ச்சியடைந்தார் ராகு; திருநாகேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.. பரிகாரம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2023 05:10
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா இன்று(8ம் தேதி) வெகு சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், ராகு பகவான் நாகவல்லி,நாகக்கன்னி இரு துணைவியருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ராகு பகவான் பெயர்ச்சியடைந்து வருகிறார். அதன்படி இந்தாண்டு இன்று(8ம் தேதி) பிற்பகல் 3:40 மணிக்கு ராகுபகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி கடந்த 6ம் தேதி அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து நேற்று இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் இன்று காலை 10:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.
பின்னர் பால்,மஞ்சள்,திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட மங்களப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 3:40 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ரகுபகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் உமாதேவி, அறங்காவலர் குழு தலைவர் சிவகுருநாதன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நாளை(9ம் தேதி) முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.