பதிவு செய்த நாள்
08
அக்
2023
05:10
மயிலாடுதுறை; நவகிரகங்களில் கேது பகவான் கோவிலாக விளங்கக்கூடிய கீழப்பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி, கேது பகவானுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழப்பெரும்பள்ளத்தில் சௌந்தர நாயகி உடனுறை நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. அமுதம் வேண்டி பாற்கடலை கடைவதற்கு கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம் உயிர் பிழைத்து இறைவனை வேண்டி தவம் செய்த இடம் என்று தலபுராணம் தெரிவிக்கின்றது. மூங்கில் காடாக இருந்த இந்த இடத்தில் நாகநாத சுவாமியை வாசுகி நாகம் வழிபாடு செய்த காரணத்தால் இந்தியாவில் கேது பகவானுக்கு என்று இருக்கும் ஒரே கோவிலாக இது விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இன்று மதியம் 3:41 மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் இதனை முன்னிட்டு கடந்த 6ம் தேதி துவங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 4 ம் கால யாகசாலை பூஜையில் புனித நீர் அடங்கிய கட்டங்கள் வைக்கப்பட்டு ஒரு லட்சம் ஆவர்த்திகளுடன் கூடிய மகா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் மங்கள வாத்தியம் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகமும் புனித நீர் கலச அபிஷேகமும் செய்யப்பட்டது. சரியாக 3.41 மணிக்கு சிறப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் கேது பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு கேது பெயர்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அர்ச்சகர்கள் பட்டு, கார்த்திகேயன், கல்யாணம் குறுக்கல்கள் செய்தனர். கேது பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை உடையவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேது பெயர்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன் தக்கார் ராமு ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.