பதிவு செய்த நாள்
16
அக்
2012
10:10
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாலை திறக்கப்படுகிறது. அடுத்த ஓராண்டுக்கான, புதிய தலைமை அர்ச்சகர், நாளை(அக்.17ல்) தேர்வு செய்யப்படுகிறார். கேரளா, பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகளுக்காக, இந்தக் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். ஐப்பசி மாத பூஜைகளுக்காக, இன்று மாலை, 5:30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படும். தலைமை அர்ச்சகர், பாலமுரளி நம்பூதிரி நடையை திறப்பார். இன்று வேறு பூஜைகள் இருக்காது. நாளை காலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப் புறத்தம்மன் கோவில்களுக்கான, அடுத்த ஓராண்டுக்கான, புதிய தலைமை அர்ச்சகர்கள் தேர்வு, நாளை குலுக்கல் முறையில் நடைபெறும். இந்த இரு கோவில்களுக்கும், தலைமை அர்ச்சகர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், அய்யப்பன் கோவிலுக்கு, ஒன்பது பேரையும், மாளிகைப் புறத்தம்மன் கோவிலுக்கு, 10 பேரையும் தகுதியுடையவர்களாக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தேர்வு செய்துள்ளது. இவர்களில், தலா ஒருவர், நாளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். ஐப்பசி மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும், 21ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.