பதிவு செய்த நாள்
16
அக்
2012
10:10
லட்சுமி, சரஸ்வதி,பார்வதி ஆகிய மூன்று தேவியரையும் ஆதிபராசக்தியாக வழிபடும் நவராத்திரி திருவிழா இன்று ஆரம்பமாகிறது. இதையொட்டி அம்மன் கோயில்கள்களை கட்டும். வீடுகளில் கொலு வைத்து பொம்மைகளை அடுக்கி, குழந்தைகளைக் கோலாகலப்படுத்துவார்கள். இறைவன் என்னும் முதலாளி, மனிதனையும், பிற உயிரினங்களையும் படைக்கிறான். அவனுக்கு இந்த உலக உயிர்கள் கைபொம்மைகளாக உள்ளன. குழந்தையின் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்தால், அதை அழுத்தும், இழுக்கும். தரையில் போட்டு தேய்க்கும், உருட்டும், எறியும். அதன் மனம் போன போக்கில் செய்யும். ஆனால், அதை அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கள்ள உணர்வு இருக்காது. இறைவனும் அப்படித்தான்! தன்னால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு அவன் சோதனையைத் தருவான். அந்த சோதனையைக் கண்டு நாம் திருந்திக் கொள்ள வேண்டும். திருந்தாத பிள்ளைகளுக்கு தான் தண்டனை தந்து திருத்துவான். அந்த தண்டனை, அவரவர் தவறைப் பொறுத்து சற்று அதிகமாக இருக்கும். கொலுவை ஒரு வேடிக்கைக் காட்சியாகக் காணக்கூடாது. இதுபோன்று தத்துவம் உணர்ந்து செய்ய வேண்டும். மனிதன் வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதையும் கொலு உணர்த்துகிறது. 3,5,7,9 என்ற படிகள் அமைப்பது எல்லாம், அவரவர் வீட்டின் பரப்பு, பொம்மைகளின் எண்ணிக்கை இதைப் பொறுத்து அமைவதே. இந்தப் படிகளை ஆன்மிகக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். ஒருவர் வீட்டில் 9 படியுடன், 900 பொம்மை இருக்கும். இன்னொருவர் வீட்டில் மூன்றே படியுடன் 90 பொம்மை தான் இருக்கும். 900ஐக் காண்பவர்கள், "நம் வீட்டில் 90 தானே இருக்கிறது என பொறாமைப்படக்கூடாது. 900 பொம்மை வைத்துள்ளவர்கள், அவற்றை எவ்வளவு கடுமையான உழைப்பின் பேரில் வாங்கியிருக்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். எனவே உழைப்பே ஒருவரை படிப்படியாக உயர்த்தும் என்பதை வாழ்வியல் ரீதியாக உணர வேண்டும். ஆன்மிக ரீதியில், மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர என்னென்ன குணங்களை ஒதுக்க வேண்டும், எவ்வௌற்றை கைக்கொள்ள வேண்டும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இதுவே கொலு படி தத்துவம். வாழ்விலும், ஆன்மிகத்திலும் உயர்த்தும் கொலுவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். ஏழைகளுக்கு தரமான உணவும், ஆடைகளும் தானம் செய்வோம். நவராத்திரி நாயகியரின் நல்லருளைப் பெறுவோம்.