திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோயில்களில் நேற்று நவராத்திரி விழா துவங்கியதை அடுத்து கொலுக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்கத் துவங்கினர்.
திருப்புத்தூரில் திருத்தளிநாதர் கோயில், பூமாயிஅம்மன் கோயில், நின்ற நாராயணப்பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நேற்று பூமாயி அம்மன் கோயிலில் மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையுடன் விழா துவங்கியது. அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கொலு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து உற்ஸவ அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. திருத்தளிநாதர் கோயிலில் கொலு அலங்காரத்தில் உற்ஸவ அம்மன் சிவகாமி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருநாள் மண்டபத்தில் கொலு அமைக்கப்பட்டு பக்தர்கள் திரளாக பார்வையிட்டனர். இரவில் உற்ஸவ அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் மகாலெட்சுமிக்கு காலை 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொலு அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது.