பதிவு செய்த நாள்
16
அக்
2023
11:10
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதுார் பகுதியில் காணப்படும் 10ம் நுாற்றாண்டு அரிகண்ட சிற்பம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனம் புதுாரில் இருந்து மடப்புரம் செல்லும் வழியில் இதுபோன்ற 10ம் நுாற்றாண்டு அரிகண்ட சிற்பம் காணப்படுகிறது. இது குறித்து வரலாற்று ஆய்வாளர் காளைராஜன் கூறியதாவது: அரிகண்ட சிற்பம் காளிக்கு வேண்டுதல் நிறைவேற தன்னைத்தானே பலி கொடுத்தலை குறிப்பதாகும். அரி என்றால் நறுக்கி என்பது அர்த்தம். அரிகண்ட சிற்பம், நவகண்ட சிற்பம் என, இரு வகை சிற்பங்கள் உள்ளன. திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் இருப்பதால், காளிக்கு பலி கொடுத்தல் குறித்த சிற்பமாக அரிகண்ட சிற்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, திருப்புவனகாசி என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மடப்புரம் கோவிலில் அம்மனுக்கு இருபுறமும் சித்திரசரிதன், வல்லபன் என, இரு சிற்பங்கள் இருந்தன. சிரித்தபடியே தன் தலையை வெட்டுவது போல காணப்படும் இந்த இரு சிற்பங்களையும் தற்போது தனி அறையில் எடுத்து வைத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். திருப்பாச்சேத்தியில் வாமன அவதார நிலதான கல், சூலக்கல் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு கால கல்வெட்டுகள், படைப்பு சிற்பங்கள் திருப்புவனம் வட்டாரத்தில் தொடர்ச்சியாக கிடைத்து வரும் நிலையில், அவற்றை பாதுகாக்க தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.