அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தியின் திருவடியை அடைந்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2023 06:10
மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு, ‘அம்மா’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் பங்காரு அடிகளார் காலமானார்.
மேல் மருவத்துார் அம்மா என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளார் என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆன்மீக குரு. இவர் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் அம்மா என்று அழைக்கப்பட்டு வந்தார்.
அன்னை இங்கு சுயம்பு வடிவாக காட்சிதருகிறாள், பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சி இங்கு சிறப்பாகும். மேல் மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோயிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது. இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை மேலும் அந்த நிலத்தில் அடியில் பல சித்தர்கள் இருப்பதாக பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவேதான் இந்தக் கோயிலை சித்தர்பீடம் என்று அழைத்தனர். பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோயில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோயிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோயிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டுதோறும் பெண்களே கோயில் விழாவை கொண்டாடுகின்றனர். கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். மாத விலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அது பற்றியும் பெரிதுபடுத்தி பேசவேண்டியதில்லை என்று கூறியவர் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி சக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.