பதிவு செய்த நாள்
24
அக்
2023
12:10
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் அக்.23 கோதைமங்கலத்தில் மகஷாசூரன் வதணத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் அக்., 15ல் நவராத்திரி விழா துவங்கியது. விழாவில் ஒன்பதாம் நாளான நேற்று அக்., 23ல் மலைக்கோயிலில் காலையில் தரிசன டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டது. பழநி மலைக் கோயிலுக்கு வின்ச்,ரோப் கார், படிப்பாதைகளில் பக்தர்கள் காலை 11:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். மலைக்கோயிலில் மதியம் உச்சிக்கால பூஜை நடந்தது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்து, பராசத்தி வேல், பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சென்றது. தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து கோதைமங்கலம், கோதீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். அங்கு வன்னி மரம், வாழை மரத்தில் சூரன் வதம், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பட்டினப்பிரவேசமாக பல்லக்கில் வந்து அம்பு போடுதல் நடைபெற்றது. பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, வேல் மலைக்கோயிலை அடைந்ததும், அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். நவராத்திரி விழா நிறைவடைந்து. இன்று (அக்., 24) முதல் வழக்கம்போல் மலைக் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறும்.