பதிவு செய்த நாள்
24
அக்
2023
08:10
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று நடைபெற உள்ள ராஜராஜ சோழன் சதய விழாவுக்காக மின் அலங்காரம் செய்ய சுதை, கல்வெட்டு என பார்க்காமல், ஆங்காங்கே ஆணி அடித்து மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல, விநாயகர் சன்னிதியை மறைத்து மேடை அமைத்தாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் முடி சூட்டிய நாளை, அவன் பிறந்த ஐப்பசி மாதம் சதய நட்சத்திர நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின், 1038வது சதய விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. இதை தமிழக அரசு விழாவாக அறிவித்துள்ளது. சதய விழாவை முன்னிட்டு, கோவில் உள்பிரகாரம், வெளிப்புறம், கோபுரம், கோவில் வெளியே உள்ள சோழன் சிலை என அனைத்து இடங்களிலும், சீரியல் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, சகட்டுமேனிக்கு ஆங்காங்கே கோபுரங்களிலும், கோவில் சுவர்களிலும் ஆணி அடிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் சுதைகள், கல்வெட்டுகள் மீதும் ஆணி அடிக்கப்பட்டுவதால், சேதமடையும் அபாயம் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கோவிலில் மின் ஒயர்கள் பல இடங்களில் கல்வெட்டு மீது கொண்டு செல்லப்பட்டுள்ளது. கோவிலின் தெற்கு புறம் மராட்டிய விநாயகர் சன்னிதி உள்ளது. இதன் முன் பகுதியில் சன்னிதியை மறைத்த படி ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவுக்கான விழா மேடை அமைக்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் வேதனை தெரிவித்தும், யாரும் கண்டுகொள்வதில்லை. இதற்கு மாற்றாக, விநாயகர் சன்னிதியை மறைக்காமல், வருங்காலத்தில் விழா மேடையை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.