பதிவு செய்த நாள்
25
அக்
2023
06:10
துடியலூர்: துடியலூர் அருகே உள்ள கிருஷ்ணசாமி திருக்கோயில், உலகளந்த பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் திருக்கோவில்கள் கும்பாபிஷேக விழா துவங்கியது.
பழமை வாய்ந்த இக்கோவில்களில் மராமத்து பணிகள், புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இன்று காலை, 9:00 மணிக்கு மகா கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதலில் வாஸ்து ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள், மாலை தர்மராஜா திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், புற்று மண் எடுத்து பூஜை செய்தல், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி பூஜைகள், பரிவார கலச பூஜைகள் நடந்தன. இன்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, கலச பூஜை, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தீபாராதனை, பிரசாதம் விநியோகம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை வெள்ளிக்கிழமை காலை, 9:00 மணிக்கு தீர்த்த குடங்கள், யாகசாலையில் இருந்து புறப்பட்டு மூலஸ்தனம், யாகசாலை வலம் வந்து, விமான அபிஷேகம், பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் , மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து, அன்னதானம், அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு உலகளந்த பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.