திடீரென பூட்டப்பட்ட கோவில் கதவு; ஐம்பொன் சிலையால் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2023 05:10
திருமங்கலம்; திருமங்கலம் அருகே நேசனேரி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வாலகுருநாத சாமி அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில்அடித்து வர பெற்ற மரப்பெட்டி மற்றும் அதிலிருந்த ஐம்பொன்னாலான பாலகுருநாத சுவாமி சிலை ஆகியவற்றை வைத்து ஒரு தரப்பினர் வழிபாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறை விழாவின் போதும் அந்த சிலையை கோவிலுக்குள் கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்து, பின்னர் மீண்டும் எடுத்துச் செல்வது வழக்கம். உள்ளூரில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்டுகளாக கோவில் பூட்டப்பட்டு கிடந்தது. இந்நிலையில் போலீசார், வருவாய்த்துறை, அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஆண்டு கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் இந்த கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தரப்பினர் ஐம்பொன் சிலையை நிரந்தரமாக கோவிலில் வைத்து வழிபட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கம்பத்தைச் சேர்ந்த ஒருவரது இல்ல விசேஷம் இன்றுகோவிலில் வைத்து நடந்துள்ளது. அதற்காக ஐம்பொன் சிலை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சாமி கும்பிடபட்டது. விழா நடந்து கொண்டிருந்த நிலையில் வெள்ளைச்சாமி தரப்பினர் திடீரென சன்னதி கதவை பூட்டி கோவிலிலேயே ஐம்பொன் சிலை நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் இங்கிருந்து எடுத்துச் செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் போலீசார் கதவை திறந்து சிலையை எடுத்து ஏற்கனவே சிலை வைத்திருந்தவர்களிடமே ஒப்படைத்தனர். இதனால் மூன்று மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.