அவிநாசி: அவிநாசி அடுத்த ராயன் கோவில் காலனி பகுதியில் எழுந்தருளியுள்ள தடத்துப் பிள்ளையார் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசிகவுண்டன் புதூர் பகுதி, ராயன் கோவில் காலனியில் எழுந்தருளியுள்ள சக்தி கணபதி எனும் தடத்துப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதினம் காமட்சி தாச சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதற்காக நேற்று வாஸ்து சாந்தி பூஜை நவக்கோள் வேள்வி, விநாயகர் வழிபாட்டுடன் முதல் கால யாக வேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். விழா நாளான இன்று இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகளுடன், திருக்குடங்கள் உலா வருதல் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி கணபதி, முருகப்பெருமான் கோவில் கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காசி கவுண்டன் புதூர், ராயன் கோவில் காலனி திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.