பதிவு செய்த நாள்
04
நவ
2023
06:11
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர விழாவை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டு கலசாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு ஜென்ம நட்சத்திர தினமான இன்று காலை 7 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வருகை தந்தார். அவரை பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர். கோவிலுக்குள் சென்ற தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் கோபூஜை, கஜ பூஜை செய்தார். தொடர்ந்து கோவில் சங்கு மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியை எழுந்தருள செய்து 16 கலசங்கள் மற்றும் 108 சங்குகள் வைக்கப்பட்டு கணபதி, நவகிரக, ஆயுஷ், தன்வந்திரி, சுதர்சன மகாலட்சுமி, அஷ்டலட்சுமி, நட்சத்திர சாந்தி ஹோமங்கள் செய்யப்பட்டு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து குருமகா சன்னிதானத்திற்கு தட்சிணாமூர்த்தி சன்னதியில் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வைக்கப்பட்டது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் கள்ள விநாயகர், சுவாமி, அம்பாள் மற்றும் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் குரு மகா சன்னிதானம் திருக்கடையூர் கோவில் தேவஸ்தான சிப்பந்திகளுக்கு அடையாள அட்டை மற்றும் சீருடைகளை வழங்கியதுடன், கோவில் வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அர்ச்சனை சீட்டு கவுன்ட்டரை திறந்து வைத்தார். பூஜைகளை ராமலிங்கம் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், தருமபுரம் ஆதீன தலைமை பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, ஸ்கந்த குரு பாடசாலை நிறுவனர் திருப்பரங்குன்றம் ஸ்ரீலஸ்ரீ ராஜா பட்டர், டாக்டர் செல்வம், ஆடிட்டர் குரு சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.