பதிவு செய்த நாள்
06
நவ
2023
10:11
கலைப் பொக்கிஷமாக காட்சியளிக்கும் கழுகுமலைக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் வலியுறுத்தியுள்ளனர். கோவில்பட்டியில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சங்கரன்கோவில் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது கழுகுமலை. சுமார் 1,600 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம். பல100 ஆண்டுகளுக்கு முன்பு சமண கலாசாலை அமைந்த இடம். சமணமும், பவுத்தமும் ஒரு காலத்தில் கோலோச்சிய இடம். பின்பு பாண்டிய மன்னர்கள் வருகைக்கு பின்பு, சைவமதம் இங்கு வளர ஆரம்பித்தது. வரலாற்று காலத்தில் கழுகுமலைக்கு கழுகாசலம், தென்பழனி, சம்பாதி சேத்திரம், கஜமுகபர்வதம், பவனகிரி, உவனகிரி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என்று பலபெயர்கள் இருந்திருக்கிறது. அதற்கான சான்றுகள் இன்றும், கழுகுமலையின் மலையில்கல் வெட்டுக்களாக பொறிக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை ரெட்டியார், கழுகுமலையை நோக்கி காவடி எடுத்து நடைபயணமாக வந்து கழுகாசலமூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப்பெருமானை பற்றிய பாடிய பாடலே காவடிச்சிந்து. இங்கு ஆறு கரங்களுடன் ஒரு தலையுடன் ராஜகோலத்தில் கழுகாசலமூர்த்தியாக, முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு மட்டும், முருகனுக்கு மயில்வாகனமாக இந்திரனே வந்து அமர்ந்திருப்பதாக, கோயில் தலவரலாறு கூறுகிறது.
தென்னிந்தியாவின் எல்லோரா!: கழுகுமலையில் உள்ளமலை, மிகப்பெரிய யானை ஒன்று படுத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. தரைமட்டத்தில் இருந்து சுமார், 500 அடி உயர மலையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது வெட்டுவான் கோயில். ஒரே பாறையில் வெட்டி (மோனோலித்திக்) இக்கோயிலை உருவாக்கியிருக்கின்றனர். கோயில் அமைப்பதற்கான பாறையை தேர்ந்தெடுத்து, அதை உளி கொண்டு செதுக்கி கோயில் போல் உருவாக்கி, முழுமையாக கோயில் வந்தவுடன் சுற்றிலும் உள்ள பாறைகளை
கேக் வெட்டுவது போல் வெட்டி, எடுத்துவிடுவார்கள். இதற்கு பெயர் மோனோலித்திக் கட்டடக்கலை என்பார்கள். இதுபோன்று, தமிழகத்தில் ஒரேகல்லில் உருவாக்கப்பட்ட ஒரே கோயில், கழுகுமலையில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் மட்டுமே, இப்படி மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. மலையின் ஒரு பகுதியில்7.50 மீ., ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி அதன் நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியிருக்கின்றனர். உள் பகுதியில் கருவறையும், அர்த்தமண்டபமும் அமைந்துள்ளன. விமானத்தில் உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மாவிற்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.விமானத்தின் பல பகுதிகளில் யாழி சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.
கழுகுமலையில் அமைந்துள்ள வெட்டுவான் கோயிலில் தான், இந்தியக் கட்டடக் கலை வரலாற்றிலேயே முதலாவதாக, மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந் ததட்சிணாமூர்த்திக்கு, மேதாதட்சிணாமூர்த்தி என்று பெயர்.
7, 8ம் நுாற்றாண்டு கால சிற்பங்கள்!: மதுரை யானைமலையில் உள்ளது போலவே, கழுகுமலையில் 7 மற்றும் 8ம் நுாற்றாண்டு காலசமண காலசிற்பங்கள் உள்ளன. மலைச்சரிவிலுள்ள பாறையில் கடைசி சமண தீர்த்தங்கரர்களான வர்த்தமானர் உட்பட, 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும், தலைக்கு மேற்பகுதியில் முக்குடைகளுடன் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களை உருவாக்கியவர்களின் பெயர்கள், வட்டெழுத்தில் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், இச்சிற்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மலையில் அமைந்துள்ள சிறு,சிறு குகைகளில் சமண பள்ளிகள் அமைத்து சமண மதக் கருத்துக்களை மட்டுமல்ல; மிகச்சிறந்த மருத்துவ பல்கலைக்கழகமாகவும் இருந்துள்ளன.
சமய இறையாண்மை மிக்க இடமாகவும், கலைக் கருவூலமாகவும் திகழும் கழுகுமலை, உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெறுவதற்கான அத்தனை தகுதிகளையும், பெற்றுள்ளது. எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க இடங்களில், மிகப்பிரமாண்டமான முறையில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் செய்து, உலக அளவில் பிரபலமடைய செய்ததால் அந்த இடங்கள் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு கிடைத்து பொருளாதார அளவில் முன்னேறியுள்ளனர்.
அந்தவகையில், கழுகுமலையையும் மிகச்சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். தமிழக அரசும், கனிமொழி எம்.பி.,யும், கழுகுமலைக்கு உலக மரபு சின்னத்திற்கான அங்கீகாரம் கிடைக்க வலியுறுத்த வேண்டும். உலக அளவில் சுற்றுலா பயணிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.