திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் ஜரூர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2023 10:11
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி துவங்குகிறது. இந்தவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18ம்தேதி நடக்கிறது. உலக பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழாவில் 7 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில் விடுதிகள் இல்லை: வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கோயில் விடுதியில் தங்கி விரதமிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு கோயில் விடுதிகள் பலமிழந்து விட்டதாக கூறி 308 விடுதி அறைகள் இடிக்கப்பட்டன. அதன் பின்னர் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் யாத்ரீகர் நிவாஸ் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் இந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்திறக்கப்படாது என கூறப்படுகிறது. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் காலியாக இருக்கும் இடங்களில் தகர செட் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்ததகர செட்டுகளுக்கு தனித்தனியே குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.
தற்காலிக கழிப்பிட வசதி: சஷ்டி விழாவில் கோயில் வளாகத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர நகருக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே தற்காலிக குளியலறை மற்றும் கழிப்பிட வசதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூரசம்ஹாரம் நடக்கும் கோயில் கடற்கரை பகுதி முழுவதும் ஜேசிபி இயந்திரம் சுத்தப்படுத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.
ஊருக்கு வெளியே வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு: கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தபோதிய இடவசதி இல்லாததால் நகரின் வெளிப்பகுதியில் காலியாக உள்ள இடங்களில் வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட உள்ளது. நேற்று முன்தினம் எஸ்பி., பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். சூரசம்ஹார தினத்தன்று நகருக்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதால் அங்கிருந்து நகருக்குள் பஸ் வசதி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.