பதிவு செய்த நாள்
13
நவ
2023
12:11
அழகர்கோவில்: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தினந்தோறும் அழகருக்கு ஐம்பொன்னாலான கல்லில் சுடப்படும் தோசை படைக்கப்படுகிறது. திருப்பதி திருவேங்கடப் பெருமாள், திருவரங்கம் அரங்கநாத பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள், இவர்களுக்கு தென்திசையில் கள்ளழகர் என்று போற்றப்படும் சுந்தரராஜபெருமாள் தலைமை தெய்வமாக விளங்குகிறார். பண்டிகை நாட்களில் மட்டுமே நாம் பலவித பலகாரங்களை உண்டு மகிழ்வோம். ஆனால் பெருமாள் கோயில்களில் கடவுளுக்கு படைக்க அன்னம், அபூபம் என்ற இருவித உணவுகளை மடப்பள்ளியில் சமைப்பது வழக்கம்.வெண் பொங்கல், சக்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் போன்றவை அன்ன உணவு. அபூபம் என்பது எண்ணெயில் தயாராகும் முறுக்கு, அதிரசம், அப்பம், வடை, தோசை போன்றவை.
மற்ற எந்த கோயில்களிலும் இல்லாத சிறப்பு கள்ளழகர் கோயிலுக்கு உண்டு எனக்கூறிய துணை கமிஷனர் ராமசாமி மேலும் கூறியதாவது: இங்கு மூலவருக்கு பாயாச அன்னம் எனப்படும் அக்கார அடிசிலும், அபூபங்களில் புஷ்டா பூபம் என்ற அளவு, சுவையில் உயர்ந்த தோசையும் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. தினசரி மாலை 6:00 மணிக்கு மேல் நித்ய அனு சந்தானம் என்ற சேவா கால பூஜை நடக்கும். இதில் நாலாயிர திவ்யபிரபந்தங்கள் பாடப்படும். இந்த பூஜை முடிந்தபின் பச்சரிசி ஒரு படி, உளுந்து அரைப்படி, மிளகு, சீரகம், பெருங்காயம், சுக்கு முதலியவற்றை அரைத்து மாவாக்கி ஒரு லிட்டர் சுத்தமான பசு நெய்யில் ஒரே தோசையாக சுடப்படும். இத்தோசை அழகருக்கு படைக்கும் சிறப்பு மிக்க நைவேத்திய பிரசாதம். இது தங்கம், வெள்ளி, துத்தநாகம், இரும்பு, செம்பு ஆகிய ஐம்பொன்னால் ஆன, 2.5 அடி விட்டம், 10 கிலோ எடையுள்ள தோசைக் கல்லில் சுடுவது இதன் சிறப்பு. நுாபுர கங்கை நீரில் அரிசி, உளுந்து, நெய்கலந்து, ஒரு படி மாவு, ஒரு லிட்டர் நெய் ஊற்றி 5 கிலோ எடையுள்ள ஒரே தோசையாக வார்க்கப்படும். இவ்வளவு பெரிய தோசை வேறு எந்த கோயிலிலும் படைக்கப்படுவதில்லை. அழகருக்கு படைக்கப்பட்டு, வேதம் ஓதுவார், அர்ச்சகர், பக்தர்களுக்கு நாழியாக (பாகம்) வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை பல நுாறு ஆண்டுகளாக இன்று வரை உள்ளது. இத்தோசையை பெற பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவர், என்றார்.