பதிவு செய்த நாள்
13
நவ
2023
12:11
சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை துவங்கியது. சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சென்னை நகரில், பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா கந்த சஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவிற்கான பந்தக்கால் இம்மாதம் 8ல் நடப்பட்டது. தொடர்ந்து, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் விழா துவங்கியது. விழாவில் 17 வரை தினமும் இரவு, மங்களகிரி விமானம்; சந்திர பிரபை; ஆட்டுக்கிடா வாகனம்; நாக வாகனம்; மங்கள கிரி விமானம் ஆகியவற்றில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருகிறார். பிரதான நாளான, 18ல், உச்சி காலத்துடன் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை பூர்த்தியாகிறது. தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான், மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. வரும், 19ம் தேதி இரவு, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது.
லட்சார்ச்சனையில் பங்கேற்றால் மூலவரை தரிசிக்கலாம்: வடபழனி ஆண்டவர் கோவிலில், மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, இன்று 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை, லட்சார்ச்சனை திருவிழா நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு, 250 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் மூலவரை தரிசிக்க, இரண்டு பேர் மட்டும், சிறப்பு நுழைவாயிலில் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.மேலும், லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், விபூதி, குங்குமம், புஷ்பம், முருகர் படம், எவர்சில்வர் பாத்திரம், முறுக்கு, அதிரசம், லட்டு ஆகியவை வழங்கப்படுகின்றன.