பதிவு செய்த நாள்
14
நவ
2023
10:11
சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்ததால் கந்த சஷ்டி என்று பெயர் ஏற்பட்டது. சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். இயற்கை சீற்றங்களிலில் இருந்து காக்க வல்லது கோவர்த்தன விரதம்.இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆயுள் விருத்தி உண்டாகும். சஷ்டி 2ம் நாளான இன்று கந்தனை வணங்க நல்லதே நடக்கும்.
கோவர்த்தன விரதம்; இயற்கை சீற்றத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் அடைகிற நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. சமீபத்தில் தமிழகத்தையும் பூகம்பம் பயமுறுத்தி சென்று விட்டது. இதுவே சற்று அதிகமாக இருந்திருந்தால், நம் நிலையை சொல்லவே முடியாது! தெய்வ சிந்தனை குறைந்து போனது. அநியாயம் அதிகரித்தது கண்டு, பொறுமையின் சிகரமான பூமாதேவியே பொறுக்க மாட்டாமல், தன் வேதனையை வெளிப்படுத்தி விடுகிறாள். அந்த பூதேவியின் நாயகனான திருமாலை வழிபட்டால், இயற்கை சீற்றங்களின் பிடியில் இருந்து விடுதலை பெறலாம். அதற்காக அனுஷ்டிக்கப் படுவதே கோவர்த்தன விரதம்.
திருமால், கிருஷ்ணாவ தாரம் எடுத்த போது அவருக்கு, "கோவர்த்தனன் என்ற பெயர் ஏற்படும் வகையில், ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மழைக்கடவுளான இந்திரனுக்கே, கோகுலத்தில் வசித்த ஆயர்கள் ஆண்டு தோறும் பூஜை செய்து வந்தனர். ஒருமுறை, அதற்குரிய ஏற்பாட்டை செய்தபோது, கிருஷ்ணர் அதைத் தடுத்தார். "இந்திரன் ஒரு தேவன் மட்டுமே. அவனுக்கு யாகபலனை ஏற்க மட்டுமே அதிகாரம் உண்டு. மழை தரும் அதிகாரம் இறைவனுக்கே! ஆனால், இந்திரன் அந்த அதிகாரத்தை கையில் எடுத்து ஆணவத்துடன் தவறாக பயன்படுத்துகிறான். நமக்கு மழை கிடைக்க காரணமாக இருப்பது இங்குள்ள மலையே. அந்த மலைக்கு நீங்கள் பூஜை செய்யுங்கள்... என்றார். ஆயர்களும், அவரது கட்டளையை ஏற்று, அவ்வாறே செய்தனர். இதையறிந்த இந்திரன் கோபத்துடன், மேகக் கூட்டங்களை அழைத்து, கோகுலத்தை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் வகையில், மழை கொட்ட ஆணையிட்டான். மேகங்களும் அவ்வாறே செய்ய, கோகுலத்தை வெள்ளம் சூழ்ந்தது. ஆயர்கள் தங்கள் பசுக்களுடன் கிருஷ்ணரை சரணடைந்தனர். கிருஷ்ணர் அந்த மலையை, தன் ஒற்றை விரலில் தாங்கி, அதன் கீழ் எல்லாரும் வந்து பத்திரமாக இருக்கும்படி கூறினார். ஆச்சரியப்பட்ட இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டான். அந்த மலை, இடையர்களை காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கிருஷ்ணர், கோவர்த்தனன் என்றும் பெயர் பெற்றார். கோவர்த்தனர் என்ற சொல்லுக்கு, இடையர் (பசு மேய்ப்பவர்கள்) என்று பொருள். இந்த சொல்லுக்கு, சிங்கம் என்ற பொருளுண்டு. மக்களை இயற்கை சீற்றம் வாட்டிய போது, சிங்கமென சீறியெழுந்து வந்து காத்தார் கிருஷ்ணர். எனவே தான், கோவர்த்தன விரதத்தை அனைவரும் கடைபிடித்து, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பை தேட வேண்டும்.
இந்த விரதம் மிகவும் எளிமையானது. காலை 6 மணிக்குள் நீராடி, "ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற பதினாறு அட்சர மந்திரத்தை முடிந்தவரை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அன்றைய தினம், முழுமையாக பட்டினி இருப்பது நல்லது. முடியாதவர்கள், நோயாளிகள், பால், பழம் மற்றும் கஞ்சி போன்ற எளிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மாலையில், பெருமாள் கோவிலுக்குச் சென்று, நெய்பண்டம் நைவேத்யம் செய்தோ, துளசிமாலை அணிவித்தோ, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், போதுமான அளவு மழை பெய்யவும், விவசாயம் சிறப்பாக நடக்கவும் வேண்டிக் கொள்ள வேண்டும். மறுநாள் காலை, கிருஷ்ணர் படத்திற்கு நெய் பண்டம் நைவேத்யம் செய்து, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாண்டு பெருமாளுக்குரிய சனிக்கிழமையில், இந்த விரதம் வருவது மிகச்சிறப்பு. எனவே, தவறாமல் இவ்விரதத்தை அனுஷ்டித்து, இயற்கை சீற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.