பதிவு செய்த நாள்
18
நவ
2023
12:11
வேடசந்தூர்; மினுக்கம்பட்டியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட மூன்று கோயில்களை இடிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று இரண்டு கோயில்கள் இடிக்கப்பட்டன. பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனியார் ஜே.சி.பி., டிரைவர்கள் முன் வராதவால், வேளாண் பொறியியல் துறை இயந்திரம் கொண்டுவரப்பட்டு இடிக்கப்பட்டது. வேடசந்தூர் ஒன்றியம் வி.புதுக்கோட்டை ஊராட்சி மினுக்கம்பட்டியில் 80 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கான கோயில், ஊர் அருகே உள்ள ஓடை நீர்ப்பிடிப்பு பகுதியில் கருப்பண்ணசாமி, அங்காள பரமேஸ்வரி, பாப்பாத்தி அம்மன் கோயில்கள் கட்டப்பட்டு நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இதே பகுதியில் உள்ள மூன்று கோயில்கள், இரு குடிநீர் தொட்டிகள் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த நாகராஜ் என்பவர், கோயில்களை இடிக்க வேண்டாம் என வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு தொடுத்த சுப்பிரமணி மீண்டும் முறையிட்டதால் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற கூறி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து பழனி ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று, ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் விஜயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், மினுக்கம்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நோக்கில் ஜே.சி.பி., இயந்திரத்துடன் வந்தனர். டி.எஸ்.பி., துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, அந்தக் கோயிலுக்கு பாத்தியப்பட்ட, கூடுதலான மக்கள் கூடினர். முதற்கட்டமாக ஜே.சி.பி., இயந்திரத்தை மறித்து உட்கார்ந்தனர். அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில், ஒரு குரூப் திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் வந்து உட்கார்ந்து மறியல் செய்தது. அப்போது பி.ஜே.பி., ஒன்றிய விவசாய அணி செயலாளர் பெருமாள், உடலில் பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். உடனே அங்கிருந்து போலீசார் அவரை மீட்டு தீயணைப்புத்துறை வண்டி மூலம் தண்ணீரை பீச்சி அடித்தனர். அதன் பிறகு நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இரண்டு சிறிய கோயில்களை மட்டும் முதற்கட்டமாக இடிக்க பொதுமக்கள் ஒத்துக் கொண்டனர். இதை தொடர்ந்து 4:30 மணி அளவில் பாப்பாத்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி கோயில்களை இடிக்க ஜே.சி.பி., எந்திரத்துடன் கோயில் அருகே சென்றனர். ஆனால் ஜே.சி.பி., டிரைவர் திடீரென மறுத்து விட்டதால், திட்டம் ஒரு மணி நேரம் நின்றது. வேறொரு டிரைவர் வரவழைக்கப்பட்ட நிலையில் அவரும் மறுத்து சென்று விட்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் ஜே சி பி இயந்திரம் கொண்டுவரப்பட்டு இரண்டு கோயில்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அந்தக் கோயில்களில் இரண்டு சிலைகளும் சுவரோடு சுவராக, சிலையாக செய்திருந்ததால் அப்படியே இடித்து தள்ளினார். மீதியுள்ள கருப்பண்ணசாமி கோயிலை இடிக்க, வருகிற 20- ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பரபரப்பான சூழ்நிலையே நிலவியது.