பதிவு செய்த நாள்
20
நவ
2023
10:11
வடபழனி : வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். இதையடுத்து, நேற்று இரவு 7:00 மணிக்கு, வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று, வடபழனி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், நாளை சொக்கநாதர் - மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடக்கிறது. வரும் 22ம் தேதி, வடபழனி ஆண்டவர் திருவீதி உலா; 23ம் தேதி அருணகிரிநாதர் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
முருகர் வீதி உலா; குன்றத்துார் முருகன் கோவிலில், 54 ஆண்டுகளுக்கு பின் சூரசம்ஹாரம் விழா, நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, நேற்று மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.பின், புதிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகர், நான்கு மாடவீதிகளில் திருமணக்கோலத்தில் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.