பதிவு செய்த நாள்
22
நவ
2023
05:11
கரூர்: கரூர் அருகே காவிரி கரையில், 1,100 ஆண்டுகள் பழமையான சோமேஸ்வரர் கோவில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அறநிலையதுறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால், கோவிலின் பழமை சிதைந்து வருகிறது என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரூரிலிருந்து, 13 கி.மீ., தொலைவில் சோமூரில் காவிரி, அமராவதி நதிகளுக்கு அருகில் சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள் மூலம், மதுரை கொண்ட கோபரகேசரி முதலாம் பராந்தக சோழனின் ஆறாவது ஆட்சியாண்டுக்கு முந்தையது என, கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பாக அதாவது, 1,100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது.
கட்டடக்கலை தோற்றம் ஆரம்பக்கால சோழர் காலத்தை உறுதிப்படுத்துகிறது. பெரிய மன்னன் முதலாம் பராந்தகனால் விட்டு செல்லப்பட்ட கோவில், காலப்போக்கில் பிற்கால சேர்க்கை ஏதுமின்றி அப்படியே உள்ளது. மேற்கு திசை பார்த்து சிவாலயம் கருவறை, அர்த்த மண்டபம் காணப்படுகிறது. பொதுவாக கோவில்களில் அர்த்தமண்டபம், கருவறையை விட அகலமாக இருப்பதை பார்த்திருப்போம், இங்கு கருவறையானது, அர்த்த மண்டபத்தை விட அகலமாக உள்ளது. இங்குள்ள கருவறையின் வெளிப்புறச் சுவரில், வடபுற கோஷ்ட பஞ்சரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிரம்மா சிலை, கிழக்கு புற கோஷ்ட பஞ்சரத்தில் முருகன் சிலை, தெற்குப்புற கோஷ்ட பஞ்சரத்தில் தட்சிணாமூர்த்தி சிலை ஆகியவை சிதலமடைந்து காணப்படுகிறது. அர்த்த மண்டப வாயிலின் இருபுறங்களிலும், சோழர் காலத்திற்கே உரித்தான இரண்டு துவாரபாலகர்கள் எதிர் எதிர் திசையில் நின்றவாறு காணப்படுகின்றனர். கருவறையின் நான்கு மூலைகளிலும், நான்கு அழகிய நந்தி சிலைகளை காணமுடிகிறது.
கருவறையினுள் இறைவன் சோமேஸ்வரர், வட்ட வடிவ ஆவுடையாரை கொண்டு லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மனோன்மணி அம்மைக்கான கோவில் தற்போது காணப்படவில்லை, அது கால ஓட்டத்தில் சிதைந்திருக்கக்கூடும். இங்குள்ள சோமேஸ்வரரை சந்திரன் வழிபட்டு, சாப விமோசனம் அடைந்தார் என்பதால், இந்த ஆலயம் சந்திர பரிகார ஸ்தலம் என்று, கருவூர் புராணத்தின் ஆம்பிராவதி நதி சருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்தியம் பெருமானுக்கு பின் பகுதியில் பலி பீடமும், சப்தமாதர்களில் வைஷ்ணவி, வராகி, பிராமி, கௌமாரி, சாமுண்டி ஆகியோர்களின் சிலைகளுடன் விஷ்ணு, விநாயகர், வீரபத்திரர் ஆகியோரின் சிலைகளும் வரிசையாக காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருப்பதால், விமானத்தின் உச்சியில் காணப்பட வேண்டிய கும்பம் இங்கு இல்லை. பல சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கின்றன. பல்வேறு இடங்களில் சிலைகள் உடைந்து தரையில் கிடக்கிறது. இது வருமானம் இல்லாத கோவில் என்பதால், ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலலை கண்டுகொள்வதில்லை. ஒரு கால பூஜை மட்டுமே நடத்து வருகிறது. இங்குள்ள மக்கள் கோவில் திருப்பணி மேற்கொள்ள முயற்சி செய்த போது, அறநிலையத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். அறநிலையத்துறையின் பாராமுகத்தால் பழமைவாய்ந்த கோவில் சிதைந்து வருகிறது. கோவிலை முறையாக பராமரிக்கவும், முறையாக பூஜை நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.