பாலக்காடு: குருவாயூர் ஏகாதசி உற்சவத்தையொட்டி கேசவன் யானையின் நினைவஞ்சலி நிகழ்வு நடந்தது.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நடைபெறுகின்றன. இந்தநிலையில் உற்சவததையொட்டி உள்ள கேசவன் யானையின் நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை நடந்தது.
கடந்த 1976ம் ஆண்டு டிச., 2ம் தேதி ஏகாதசி உற்சவத்தின் முதல் நாள் கேசவன் என்கிற யானை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. இதனை தொடர்ந்து உற்சவத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மறைந்த கேசவனின் உருவச்சிலை முன்பாக கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகள் பார்த்தசாரதி கோவிலில் இருந்து கேசவன் படத்துடன் வீதி உலா வந்து நினைவஞ்சலி செலுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணியளவில் இந்திரசென் என்ற யானை கேசவன் யானையின் புகைபடத்தை ஏந்தி உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 15 யானைகள் கலந்து கொண்ட ஊர்வலம் தெற்கு நடை அருகே உள்ள ஸ்ரீவத்சம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைத்த கேசவன் யானையின் உருவச் சிலை முன் அணிவகுத்து நின்றனர். தொடர்ந்து துதிக்கை உயர்த்தி வணங்கினர். இதை தொடர்ந்து யானைகளுக்கு மூலிகை சாப்பாடு, பழ வகைகள், கரும்பு, சர்க்கரை, அவில், மலர் ஆகியவை வழங்கப்பட்டன.
குருவாயூர் ஏகாதசி நாளை (நவ. 23ம் தேதி) வெகு விமர்சையாக நடக்க உள்ளது. கோவில் நடை திறந்தே இருக்கும். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு வரிசையும், முதியோருக்கு சிறப்பு வரிசையும் ஏற்பாடு செய்துள்ளனர். ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. குருவாயூர் ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு கோவில் முன்பாக உள்ள மேல்ப்பூத்தூர் கலையரங்கில் நடந்து வந்த செம்பை சங்கீத உற்சவத்தில் இன்று காலை 9 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொண்டு பாடிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர். செம்பை சங்கீத உற்சவம், நாளை நிறைவடைகிறது.