பதிவு செய்த நாள்
23
நவ
2023
11:11
மயிலாடுதுறை; திருக்கடையூர் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்திய வானதி அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் அம்பாள் சன்னதியில் மாலை மாற்றிக் கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு இன்று வந்த பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி, அவரது கணவர் சீனிவாசனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உள்துறை சூப்பிரண்டு விருதகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற வானதி அவரது கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கோ பூஜை, கஜ பூஜையும் செய்தார். தொடர்ந்து வானதி, சீனிவாசன், பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரது பெயர்களில் சங்கல்பம் செய்து, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வழிபட்டார். பூஜைகளை கணேஷ் குருக்கள் செய்து வைத்தார். பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜலட்சுமி, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை செயலாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.