பதிவு செய்த நாள்
08
டிச
2023
09:12
சென்னை: பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் செப்பு பட்டயம், குற்றாலநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், குற்றாலநாதர் கோவில் உள்ளது. இங்கு ஐந்து பழமையான செப்பு பட்டயங்களை, ஹிந்து சமய அறநிலைய துறையின் சுவடித் திட்ட பணிக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, குழுவின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறியதாவது: குற்றாலநாதர் கோவிலில் கிடைத்தவற்றில், இரண்டு செப்பு பட்டயங்கள், அழகன்பெருமாள் பாண்டியன் மற்றும் சீவலவரகுணராம பாண்டியன் ஆகியோர், குற்றாலநாதர் கோவிலுக்கு சாயரட்சை கட்டளை என்ற, மாலை வழிபாட்டுக்கு தானம் அளித்ததை குறிப்பிடுகின்றன. இன்னொரு செப்பு பட்டயத்தில், அசாதுவாலா சாய்பு என்ற இஸ்லாமியர், நித்திய விழா பூஜைக்கு தானம் அளித்த செய்தி பதிவாகி உள்ளது. மற்ற செப்பு பட்டயங்களில், திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர், குமரகுருபரர் பாடல்கள் உள்ளன. மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின், 14 முதல் 18ம் நுாற்றாண்டு வரை, அவர்களின் வாரிசுகள் தென்காசி, வள்ளியூர், கரிவலம்வந்தநல்லுார், செங்கோட்டை, கயத்தாறு, நடுவக்குறிச்சி, புலியூர் ஆகிய இடங்களில் இருந்து ஆட்சி செய்துள்ளனர். குற்றாலநாதர் கோவிலுக்கு தானம் அளித்த அழகன்பெருமாள் பாண்டியனின் காலம், 1473 முதல் 1506 வரை என, அழகன்பெருமாள் கதை என்ற ஓலைச்சுவடி குறிப்பு உள்ளது. தென்காசி பகுதியை, குலசேகரபெருமாள் பாண்டியன் ஆண்டார். அவருக்கு பொன்னின்பெருமாள், தன்மப்பெருமாள் என, இரண்டு மகன்கள் இருந்தனர். பொன்னின்பெருமாள், தென்காசியில் இருந்தும், தன்மப்பெருமாள் புலியூரிலிருந்தும் ஆண்டனர். பொன்னின்பெருமாளுக்கு குலசேகரப்பெருமாள், வீரபாண்டியன் என்ற மகன்களும், தன்மபெருமாளுக்கு அழகன்பெருமாள், சீவலமாறன், சின்னத்தம்பி ஆகிய மகன்களும் இருந்தனர். குலசேகரபெருமாள் குற்றாலத்திலிருந்து ஆட்சி செய்தார். அழகன்பெருமாளும், சகோதரர்களும் போர்க்கலையில் வல்லவர்களாக வளர்ந்தனர். அவர்கள் வளர்ந்த பின், குலசேகரப்பெருமாளிடம் ஆட்சி உரிமை கேட்டனர். இதை விரும்பாத குலசேகரபெருமாளின் மகனும், அமைச்சர் ராஜகுல தேவனும், அழகன்பெருமாளையும், சீவலமாறனையும் இருட்டறையில் தள்ளி, மள்ளர்களை வைத்து கொன்றனர். இதை அறிந்த குலசேகரபாண்டியன், ராஜகுலத்தேவனை கொன்று உயிர் விட்டான். பின், கயத்தாறு வெட்டும்பெருமாள் பாண்டியன், தென்காசி மீது போரிட்டு வென்று, மாவலி என்பவனை ஆள வைத்தான். அரச பதவி போட்டியால், தன் அண்ணனின் அமைச்சரால் கொல்லப்பட்ட அழகன்பெருமாள் பாண்டியன் தான், இந்த கோவிலுக்கு தர்ம காரியங்கள் செய்ததாக செப்பு பட்டயம் கூறுகிறது. இவனுக்கு, கோசடிலவன், மாறன், திரிபுவனசக்கரவர்த்தி, கோனேரிமைகொண்டான், ஸ்ரீபெருமாள் என்ற பட்டப்பெயர்களும் இருந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.