வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை வழிபாடு பக்தர்களின்றி நடந்தது.
கோயில் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டதால் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனாலும் பிரதோஷ நாளன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் அமாவாசை நாளான இன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் வனத்துறை கேட் முன்பு குவிந்திருந்தனர். ஆனாலும் அவர்களை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் நின்றிருந்த வெளி மாவட்ட பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி கோயிலை நோக்கி வணங்கி சென்றனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் இன்றி மலைப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.