சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2023 09:12
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 26 ம் தேதி தேர் திருவிழாவும், 27 ல் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
புகழ் வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவில் ஆண்டிற்கு இரு முறை நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சன விழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த இரு விழாக்களின் போது மூலவரான நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள் தருவார் என்பது மிக சிறப்பு. இந்த ஆண்டின் ஆருத்ரா தரிசன விழா இன்று (18ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிர்ப்புறம் உள்ள பிரம்மாண்டமான உற்சவ கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் மீனாட்சி நாததீட்சிதர் உற்வச கொடியை ஏற்றி வைத்தார். மேலும் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம். இம்மாதம் 26 ஆம் தேதி நடைபேறுகிறது. இன்றைய தினம் நடராஜபெருமானும் - சிவகாமசுந்தரி அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு வீதிகளில் வலம் வருவார்கள். அடுத்த நாளான 27 ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி அன்று அதிகாலை நடராஜபெருமானுக்கும் - சிவகாமசுந்தரி அம்மனுக்கும் நடராஜர் கோவிலின் உள் வளாகத்தில் உள்ள, ஆயிரங்கால் மண்டப முகப்பில், அபிஷேகம் நடைபெறும் பின்பு சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை மாலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி புறப்பாடும், விசேஷ நாதஸ்வர கச்சேரிகளும், தேவார திருவாசக பன்னிரு திருமுறைகளும் நடைபெறும் விழா ஏபாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சதர் தலைமையில் பொது தீட்சதர்கள் செய்து வருகின்றனர்.