ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு; ரங்கா... ரங்கா... கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 04:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்திருளினர். ரங்கா... ரங்கா கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12ம் தேதி தொடங்கியது. பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 4.30 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகையில் சேவை சாதித்தார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் நம்பெருமாளை தரிசனம் செய்து பரமபத வாசல் வழியாக தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது பூலோக வைகுண்டம்.