பள்ளிவாசலில் துவா செய்த ஐயப்ப பக்தர்கள்; மத நல்லிணக்கத்துடன் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2023 05:12
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே ஐயப்ப பக்தர்கள் மத நல்லிணக்கத்தோடு வேம்பார்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் துவா செய்துவிட்டு, ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.
வேம்பார்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் வேம்பார்பட்டி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக 200க்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி மாலை அணிந்து 48 நாள் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து வாரம் தோறும் சனிக்கிழமை கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், பஜனை, அன்னதானம் நடந்தது. இன்று மண்டல பூஜை அன்னதான விழா நடந்தது. வேம்பார்பட்டி ஐயப்பன் கோயிலில் கூடிய ஐயப்ப பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு பின் ஊர்வலமாக சென்று கிராம கோயில்களில் சுவாமிகளை வழிபட்டனர். பின் மத நல்லிணக்கத்துடன் வேம்பார்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு சென்றனர். பள்ளிவாசலில் அசரத் பாத்தியா ஓதி துவா செய்தனர். ஐயப்ப பக்தர்களை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப் பி.எம்.எம்.அக் வரவேற்றார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, அன்னதானம் நடந்தது. இதில் தொழிலதிபர் அமர்நாத், அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் ஐயப்பன் கோயிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ரத ஊர்வலம் நடந்தது.