பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்க பலதலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒருமுறை அவர் சிவனின் கட்டளைப்படி திருவல்லம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்குக் கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவமிருந்து தோஷம் நீங்கப் பெற்றார். பின் தன் தாய்க்கு தர்ப்பணம் கொடுத்தார்.
பரசுராமருக்கு பிறகு, மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பூஜை செய்துள்ளனர். வல்லம் என்றால் ‘ தலை‘ என்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம்வரை நீண்டு கொண்டிருந்ததால் இத்தலம் “திருவல்லம்“ எனப்பட்டது.
திருவனந்தபுரம் பத்மநாபரைப் பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கி விட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பெருமானின் உடல் பகுதியாகவும், திருவல்லம். பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமானின் கால்பகுதியாகவும் விளங்குவதால் ஒரேநாளில் இம்மூன்று தளங்களையும் தரிசிப்பது மிகவும் நல்லது. பரசுராமர் தன் தாய்க்கு பிதுர்தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் “தட்சிணகயை “ என அழைக்கப்படுகிறது.
ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார். பரசுராமர் மஹாவிஷ்ணுவின் 6வது அவதாரமாவார். வாழ்வில் முன்னேற ஒழுக்கம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அவதாரத்தின் நோக்கமாகும். தன் தாய் ஒருவாலிபனை ஏறிட்டு பார்த்துவிட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக தந்தை ஜமத்கனி முனிவரின் உத்தரவுப்படி தாயை வெட்டிக்கொன்றவர். பிறகு தந்தையிடம் பெற்ற வரத்தால் தாயை பிழைக்க வைத்தவர். சகலகலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் ‘ பரசு ‘ என்பதால் “ பரசுராமர்“ ஆனார்.