பதிவு செய்த நாள்
29
டிச
2023
05:12
குன்னூர்; குன்னூர் ஜெகதளா கிராமத்தில், கன்னி ஹெத்தையம்மனை வழிபடும் வகையில், விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள, ஜெகதளா கிராமத்தில் ஆறுார் என அழைக்கும் கிராம மக்களால், டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகை சிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ்பிக்கட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட, ஹெத்தைக்காரர்கள் தாய் வீடு என அழைக்கும் கொதுமுடி கிராமம் வரை, பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர். விழாவில், இன்று காரக்கொரை மடிமனையில் நடந்த குண்டம் திருவிழாவில், சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் பூசாரி கும்பம் எடுத்து வர ஹெத்தைக்காரர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கியவர்களின் காலில் மக்கள் விழுந்து ஆசி பெற்றனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பல்லாயிர கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தன. வரும், ஜன., 1ம் தேதி மடியரை என அழைக்கப்படும் பாறை, ஹெத்தை அம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆறூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.