ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் கோவில்கள் திறக்கக் கூடாது; இந்து மக்கள் கட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2023 11:12
மயிலாடுதுறை; ஆங்கில புத்தாண்டை ஒட்டி நள்ளிரவில் கோவில்களை திறக்க கூடாது என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் நேற்று வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்துக்களின், தமிழர்களின் புத்தாண்டு சித்திரை முதல் தேதியாகும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சார பண்பாடு சீரழிவு நடைபெறுகிறது. நள்ளிரவில் நடுவீதியில் மது அருந்தும் செயல்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. நள்ளிரவில் இந்து கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்கள் அதிக அளவில் திறக்கப்படுகின்றன. தேவாரம் பாடல் பெற்ற திருக்கோவில்கள் எல்லாம் இன்று வியாபார கோவில்களாகி விட்டன.
அண்டை மாநிலமான ஆந்திராவில் கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுகள் தேவையில்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோவில் நிர்வாக அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் யாருக்காகவும் எந்த விதமான சிறப்பு பூஜைகளும் ஜனவரி 1 அன்று நடத்த வேண்டியது அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் டிஐஜி. நள்ளிரவில் ஹோட்டல்கள், பார்கள் திறந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. தமிழக அரசு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு கோவில்கள் திறக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு கோவில்கள் நள்ளிரவில் திறக்கப்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியமான பெரிய கோவில்களும் இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். நள்ளிரவில் கோவில்கள் திறக்கப்படுவது ஆகம விதிகளுக்கு புறம்பானது. டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு கோவில்கள் திறக்கப்பட்டால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.