பதிவு செய்த நாள்
04
ஜன
2024
11:01
மதுரை : மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா நடைபெற்றது.
சிவபெருமான் கையிலாயத்தில் அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் விதம் தானியமிட்டு கொண்டிருந்தார். இதுகுறித்து பார்வதி கேட்க, படி அளப்பதாக சிவபெருமான் கூறினார். இதை பரிசோதிக்க நினைத்த பார்வதி மறுநாள், ஒரு எறும்பை குவளை ஒன்றில் அடைத்து வைத்தார். பின் அக்குவளையை திறந்து பார்த்தபோது எறும்பு ஒரு அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. தன் செயலுக்கு சிவபெருமானிடம் பார்வதி வருத்தம் தெரிவித்தார். அந்நாளே மார்கழியில் வரும் தேய்ப்பிறை அஷ்டமி திதியே அஷ்டமி பிரதட்ணம் ஆகும். இவ்விழாவை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்கள் புறப்பாடாகி, யானைக்கல், நான்கு வெளி வீதிகள், நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட்வீதி, விளக்குத்துாண் வழியாக கீழமாசிவீதி தேரடி வந்து சேர்ந்தது. சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் சப்பரத்தில் வலம் வந்தனர். மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர்.