பதிவு செய்த நாள்
05
ஜன
2024
11:01
அயோத்தி: வரும் 22ம் தேதி, அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழில், கோவிலின் பிரமாண்ட தோற்றம் மற்றும் குழந்தை ராமரின் அழகிய புகைப்படத்துடன், ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்ற முக்கிய நபர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு, வரும் 22ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க, 7,000 பேருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் அழைக்கப்பட உள்ளனர். இதற்கான அழைப்பிதழ் தயாராகிவிட்டது. அதில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான விபரங்கள் அடங்கிய பிரதான அழைப்பிதழுடன், குழந்தை ராமர் சிலையை கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய அழைப்பிதழும் இடம் பெற்றுள்ளது. இது தவிர கையேடு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்ற முக்கிய நபர்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளன. அழைப்பிதழின் முகப்பு பக்கத்தில், ராமர் கோவிலின் பிரமாண்ட, சில்லவுட் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க, ராமாயணம், டிவி தொடரில் ராமர் - சீதையாக நடித்த நடிகர்கள் அருண் கோவில் மற்றும் தீபிகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 4,000 துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 50 பேரின் குடும்பத்தினரும் விழாவுக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.