கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2024 03:01
மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதினத்தின் கோமுக்தீஸ்வரர் கோயிலில் தை ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை ஆதினத்தில் அதுல்ய குஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தரின் தந்தையை சிவஇருதயபாதருக்கு வேள்வி நடத்த ஆயிரம் பொற்காசுகள் தேவைப்பட்டது. கோமுக்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து இருந்த திருஞானசம்பந்தர் இடரினும் தளரினும் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். பாடல் பாடி முடிந்ததும் பூதகணம் மூலம் கொடிமரம் அருகில் பலிபீடத்தில் ஆயிரம் பொற்காசுகளை இறைவன் கொடுத்து அனுப்பியதாக புராண வரலாறு தெரிவிக்கின்றது. அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இவ்வாலயம் பல்வேறு சிறப்புகளையுடையது. இவ்வாலயத்தின் தை ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்திற்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷபகொடி ஏற்றப்பட்டது. இதில், திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வருகின்ற 12ம்தேதி திருஞானசம்பந்தர் பொன் உலவாக்கிழி பெறும் ஐதீக விழா, தினந்தோறும் சுவாமி புறப்பாடு, 16ம்’ தேதி தேரோட்டம், 17ம் தேதி ரதசப்தமி தீர்த்தவாரி முக்கிய விழாவாக நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.