பதிவு செய்த நாள்
13
ஜன
2024
11:01
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 16ம் தேதி நடக்கிறது.
இது குறித்து, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் கூறுகையில்," உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தின் முக்கிய மையமாக விளங்கும் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் தமிழ் மற்றும் வங்க கட்டடக்கலை பாரம்பரியத்துடன் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த, 2019 ஆம் ஆண்டு டிச., மாதத்தில் பணிகளை, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தர் தொடக்கி வைத்தார். பணிகள் நிறைவு அடைந்ததை ஒட்டி இம்மாதம், 15, 16, 17 தேதிகளில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
முதல் நாள் ஜன., 15ம் தேதி காலை, 7:00 மணி அளவில் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர் வித்யாலயா கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து, பொங்கல் விழா நடக்கிறது.காலை, 8:00 மணிக்கு பூர்வாங்க பூஜைகள், வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து மங்கல இசை, நாம சங்கீர்த்தனம், சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு தேவார இசையும், சாரதா தேவியாரின் நாம சரித்திர நாட்டிய நாடகமும் நடக்கிறது. இரண்டாம் நாளான ஜன., 16ம் தேதி சுவாமி கவுதமானந்தர் தலைமையில் காலை, 6:30 மணி முதல், 7:30 வரை கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு பொதுக்கூட்டத்தில் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் நிறுவனங்களின் பொதுச் செயலாளர் சுவாமி சுவீரானந்தர் பேசுகிறார். தொடர்ந்து, விழா மலர் வெளியிடுதல், கோவில் கட்டட பணியாளர்கள் மற்றும் வித்யாலயா அன்பர்களை கவுரவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்னதானமும், தொடர்ந்து செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும் நடக்கிறது. மூன்றாம் நாளான ஜன., 17ம் தேதி நாயக்கன்பாளையம் பஜனை குழுவினரின் திவ்ய பிரபந்த நிகழ்ச்சியும், நிவேதிதா சிறுமியர் சங்கத்தின் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், வித்யாலய இசை ஆசிரியர்களின் பஜனையும் நடக்கிறது.