பதிவு செய்த நாள்
17
ஜன
2024
02:01
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
ஸ்ரீராமரின் குலதெய்வம் ரங்கநாதர் எப்படி?; ராமர் தனது கரங்களினால் பூஜித்த பெருமாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். ராமரின் 67 தலைமுறைகளுக்கு முன்னால் இருந்தே வணங்கப்பட்டவர் ரங்கநாதர். ராமரும், அஜன், திலீபன், தசரதன் என்று ராமரின் முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் ரங்கநாதர். முதலில் சூரிய குலத்தில், அதாவது ரகு வம்சத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபட கொண்டு வந்தார். தசரதன், ராமர் உள்ளிட்டோர் இச்சிலையை வழிபட்ட நிலையில், இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த ராவணனின் தம்பி விபீஷணனுக்கு ராமர் பரிசாகக் கொடுத்தார் என்பது வரலாறு.
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வரும் பிரதமர்; உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் நிர்மாணிக்கப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான பாரம்பரிய சடங்குகள் யாகத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜன. 21ம் தேதி வரை தொடரும் சடங்குகளை அடுத்து மறுநாள் கும்பாபிஷேகம் நடந்தேறும். உலகமே எதிர்பார்க்கும் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடக்கிறது. ராமர் சிலையை, புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கருவறை (கர்ப்பகிரகம்) வரை பிரதமர் மோடி எடுத்து செல்ல உள்ளார். இதற்காக பிரதமர் தற்போது 11 நாள் விரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டைக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க பிரதமர் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி 22ம் தேதி அயோத்தி கோயில் திறப்பு விழா இருக்கும் நிலையில் பிரதமர் மோடி ஸ்ரீராமரின் குலதெய்வமான ரங்கநாதர் தரிசனம் செய்ய வருவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வரும் 20ம் தேதி அல்லது 21ம் தேதிகளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.