மாவூற்று வேலப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு; சுனையில் நீர் வரத்து.. பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2024 04:01
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் தை மாதம் 3ம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேற்கு தொடர்ச்சி மலை மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் மழை ஓய்ந்த பின்பும் அதிக நீர் வரத்தால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன் நடந்தது. மலைப்பகுதியில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் கோயிலின் சிறப்பு. சுனையில் நீராடி வேலைப்பரை வழிபட்டால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். விரதம் இருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திச்செல்வர். அமாவாசை, பவுர்ணமி, கார்த்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு கோடையில் சுனையில் நீர் வரத்து குறைந்து நீர் கசிவு மட்டுமே இருந்தது. சில மாதத்திற்கு முன் மலைப்பகுதியில் பெய்த மழையால் வேலப்பர் கோயில் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில நாட்கள் சுனையில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது மழைக்கான சூழல் மாறியதுடன் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் வேலப்பர் கோயில் சுனையில் அதிக நீர்வரத்து தொடர்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுனை நீரில் குளித்து சுவாமி வேலப்பரை தரிசித்துச் செல்கின்றனர்.