பதிவு செய்த நாள்
26
அக்
2012
11:10
பொன்னேரி: திருப்பாலீஸ்வரர் கோவிலில், 45 ஆண்டுகளாக சிதிலம் அடைந்த தேருக்கு பதிலாக, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேருக்கான திருப்பணிகள் முடிந்து, நாளை மறுநாள், (28ம் தேதி) வெள்ளோட்டம் நடைபெறுகிறது. பொன்னேரி - பழவேற்காடு சாலை, திருப்பாலைவனம் கிராமத்தில் லோகாம்பிகை சமேத திருப்பாலீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன் கோவிலின், 32 அடி உயர திருத்தேர் சிதிலம் அடைந்து நின்று போனது. மற்ற திருப்பணிகள் முடிந்த நிலையில், புதிய தேர் செய்யும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டது. அறநிலையத் துறை அனுமதியுடன், 10 லட்சம் ரூபாய் நிதி உதவி பெற்று, தேர் திருப்பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி ஸ்தபதி தலைமையில், 13 பேர் கொண்ட குழுவினர் தேர் திருப்பணியில் ஈடுபட்டனர். அரசு நிதியுதவியுடன் மற்றும் உபயதாரர்கள் நன்கொடையில், 45 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் தயார் நிலையில் உள்ளது.புதியதேர் திருப்பணிகள் முடிந்து, நாளை மறுநாள், 28ம் தேதி வெள்ளோட்டம் விட கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வள்ளுவன் தலைமையில், பையூர் கோட்ட வேளாள மரபினர் நல சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.