சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(பிப்.,13) மாலை திறக்கப்படுகிறது. பிப்., 18 வரை பூஜைகள் நடைபெறும்.
சபரிமலையில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து ஜன., 21 -ல் நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. புதிய மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இன்று வேறு பூஜைகள் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின் தந்திரி மகேஷ் மோகனரரு, ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம். அத்தாழ பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். பிப்., 18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது தமிழகத்தில் இன்று மாசி ஒன்றாம் தேதி. ஆனால் கேரளாவில் நாளை மாசி ஒன்றாம் தேதி என்பதால் இன்று மாலை நடை திறக்கப்பட்டு நாளை முதல் மாசி பூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.