பதிவு செய்த நாள்
26
அக்
2012
11:10
நாகர்கோவில்: விஜயதசமி பூஜை விழாவையொட்டி, தமிழ்நாடு சிவசேனா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த 108 தூர்கா சிலைகள் மற்றும் 9 அடி தூர்கா சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புத்தேரி குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கடந்த 15ம்தேதி நவராத்திரி விழா துவங்கியது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்கள் குமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளிலும், சில கோயில்களிலும் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சிவசேனா சார்பில், நவராத்திரி விழாவையொட்டி, துர்கா சிலைகள் வடிவமைக்கப்பட்டு, கீழ புத்தேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் பூஜைக்காக வைத்து பின்னர், நீர் நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு 108 துர்கா சிலைகள் கடந்த 15ம் தேதி நவராத்திரி விழா துவங்கிய அன்று பூஜைக்காக வீடுகளில் வைக்கப்பட்டது. அன்று முதல் சிலைகளுக்கு பூஜைகள் நடந்து வந்தது. விஜசதசமி அன்று சிலைகள் புத்தேரி குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (அக், 24) காலை பூஜைக்காக வைக்கப்பட்ட தூர்கா சிலைகள் ஒவ்வொன்றும் எடுத்து செல்லப்பட்டு, கீழப்புத்தேரி அழகாம்பிகை சமேத நயினார் கைலாசநாதர் கோயிலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து மகிஷாசுர மர்த்தினி ஹோமம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மாலை துர்கா தேவி சிலைகள் யானை பவனியுடன் ஊர்வலமாக சென்று, புத்தேரி குளத்தில் பூஜை செய்யப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு சிவசேனா பொதுச்செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். மாநில தலைவர் ராஜேஷ் துவக்கி வைத்தார். கிழக்கு மாவட்ட தலைவர் முருகன், நாகர்கோவில் நகர இந்து முன்னணி தலைவர் ராஜா, செயலாளர் நம்பிராஜன், இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், நாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை யொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவு சூரசம்காரம் மற்றும் வாணவேடிக்கை ஆகியன நடந்தது.